சதுரகிரி பயணம்

சதுரகிரி பயணம்

மனிதனை நெறிப்படுத்துவது சாஸ்திரங்கள், பக்குவப்படுத்து புராணங்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறக்கிறான். பிறப்பின் நோக்கம் என்னவென்று மெல்லத் தேடினான். இயற்கையோடு ஒட்டியே அவனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். பக்குவமும், முதிர்ச்சியும் அடைந்தவன், உண்மையைத் தேடி ஆன்மீகத்தை வளர்த்துக் கொண்டான். காலம் மாறினாலும் காரியம் ஒன்றுதான். கானகங்கள், குகைகளில் தன் வசிப்பை அமைத்துக்கொண்டான். இயற்கையை தன் வசப்படுத்திப்படுத்திக் கொண்டான். மனித நேயத்தை அறிந்தவன் மனிதனாகிறான். நேயத்தை அறிந்தவன் மகான் ஆகிறான். பின்னாளில் தெய்வமும் ஆகிறான். இத்தகையவர்கள்தான் முனிவர்கள் ரிஷிகள், மகான், சித்தர்கள் என்று சிறப்பித்து கூறுகிறோம். இந்த உலகமே அதிசயம்தான். நமது வழிபாட்டுக்கு உரிய பஞ்சபூதங்களே அதிசயம். இந்த உலகின் ஒரு பகுதியில் உறைபனி, மறுபகுதியில் சுட்டெரிக்கும் வெயில், மற்றொரு பகுதியில் தண்ணீர், ஓங்கி உயர்ந்து வளர்ந்து பரந்திருக்கும் காடுகள், குகைகள், மலைகள். இவைகளில் அறிந்த, தெரிந்த மலைகள், குகைகள் சில. இன்னும் அறியப்படாத தீர்த்தங்கள், குகைகள் ஏராளம். இவைகளில் அதிகம் அறியப்படாத, வெளி உலகத்திற்கு தெரியாத மலைகளில் ஒன்று சதுரகிரி.

சித்தர்கள் வசித்த குகைகள் இந்த மலைப்பிரதேசத்தில் ஏராளமாக இருக்கின்றன. பல குகைகள் அமைந்த கடினமான பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல முடியாது. ஆனால், அவர்கள் இன்றைக்கும் நமக்கு சூட்சம்மாக இருந்து நம்மை ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கயிலாயத்தில்-மானேஸ்வர ஏரியில் இன்றைக்கும் தினமும் சித்தர்கள் நட்சத்திர உருவில் வலம் வருகிறார்கள். சில நட்சத்திரங்கள் திடீரென வானத்தில் தோன்றும். வேகமாக கீழிறங்கும். சில நட்சத்திரங்கள் ஏரியில் இறங்கி மேல் செல்லும். இதே காட்சி சதுரகிரியில் கண்டவர்கள் ஏராளம். அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் இது போன்ற அதிசயங்களை இங்கு அடிக்கடி காணலாம். சித்தர்களது தரிசனம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் எல்லோரும் பாக்கியசாலிகள். வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டை முனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச் சித்தர், கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச் சித்தர், இராமதேவர், இடைக்காட்டு சித்தர், திருமூலர், போகர், அழுக்காணிச் சித்தர், காலங்கி, நாதர், மச்சமுனி ஆகியோர் பதினெண் முதலான சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்து யோகத்தில் திளைத்தனர், வேள்விகள் புரிந்துள்ளனர்.

சதுரகிரி எட்டு வகை மலைகளுக்கு தலையானது என்கிறது 'சதுரகிரி தல புராணம்' கிழக்கில் இந்திரபுரி, மேற்கில் வருணகிரி, வடக்கில் குபேர கிரி, தெற்கில் ஏமகிரி இப்படி சதுரம் போல் அமைந்து மலைகளுக்கு மத்தியில் சிவகிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி என நான்கு மலைகள் அமைந்து இந்த மலைப்பிரதேசம் சதுரகிரி என்று அழைக்கப்பெறுகிறது. அற்புத மலையில் பிரதானமாக அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆலயங்கள் தவிர, பிலாவடி கருப்பர், ரெட்டை லிங்கம், பெரிய மகாலிங்கம் போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலையும் இருக்கிறது.

உலக முழுதுந் தொழுதேத்தி உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை யிலிங்க மயமா யிருப்பாவைக்
கலக மயக்கங் கழன்றோடக் கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர் ஆடிப்பு என்றன் முடிக் கணியே

தென் தமிழகத்தின் மேற்கு மலை தொடர்ச்சியில் சதுரகிரி மலை அமைந்துள்ளது சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்று அழைக்கிறார்கள். கிழக்குத் திசையில் இந்திரகிரியும், தென்திசையில் ஏமகிரியும், மேற்குத் திசையில் வருணகிரியும், வடதிசையில் குபேரகிரியும், இவற்றின் மத்தியில் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது. இது தவிர இந்நான்கு மலைக்கு மத்தியில் சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது. இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும். இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகும். அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும். அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும் இத்திருத்தலம். இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம், கெளண்டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் நீராடியவர்கள் பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார். புத்துணர்வு பெறுவர். திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி; சிதம்பரத்தை வணங்கினால் முக்தி; திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும். காசியில் இறக்க முக்தி. இந்த சதுரகிரி தலத்திலோ இந்த நால்வகை முக்தியும் கிடைக்கும் என்பர். இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக் காற்றினால் ஆயுள் அதிகரிப்பதோடு, நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.

சதுரகிரிக்குச் செல்லும் பாதை, இயற்கையாக அமைந்த ஒன்று. மலையை ஓரளவு குடைந்து மகாலிங்கத்தைக் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதை. வாகனங்கள் செல்ல முடியாது. யாவும் நடையாத்திரைதான்! குறுகலான பாதை... கரடுமுரடான வழித்தடம். சபரிமலையில் உள்ளதுபோல் எந்த வசதியும் இங்கு கிடையாது. செல்போன், உணவு, தங்குவது, கழிப்பிடம் என்று எதற்குமே முறையான வசதியில்லை. இந்தப் பாதையில் மேடும் பள்ளமும், குண்டும் குழியும் சகஜம். சில இடங்களில் பாதையின் அகலம் வெறும் மூன்றடி மட்டுமே. அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் திரளான மக்கள் நடக்கும்போது நெரிசல் ஏற்பட்டு கால் இடரும் வாய்ப்பு நிறைய உண்டு. பாதையின் ஓரமாகக் காலை வைத்துவிட்டால், கீழே அதல பாதாளம்தான்! சில இடங்களில் பாறை மீது எந்த பிடிமானமும் இல்லாது நடக்கும்போது வழுக்கும் தன்மை கொண்டு உள்ளன. அம்மாதிரி இடங்களில் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டும்.

இந்த யாத்திரை தொடங்கும் முன், பலரையும் பெருமூச்சுவிட்டு மிரட்சி செய்யும் விஷயம், மலையை தத்துவம் அவசியம். எங்கள் பயணத்தின்போது வயது முதிர்ந்தோர், இதய நோய், சக்கரைநோய், இதய நோய், இரத்த அழுத்தாத்தால் பதிக்கப்பட்டவர் பலரும் மலையேறுவதை கண்டோம். ஒரு கால் இழந்த பக்தர் மரக்காலுடன், ஊன்றுகோல் கொண்டு ஏறுவதைக் கண்டோம்.

சதுரகிரியில் சஞ்சீவி மலை

இராமாயணப் போரில் இந்திரஜித்து, இலக்குவன் முதலானோரைத் தனது பிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சித்து மயங்கி கீழே விழும்படி செய்ய, இது கண்டு வருந்திய இராமன், சுக்ரீவன் முதலானோர் வாயுபுத்திரனாகிய ஆஞ்சநேயரிடம் விபரம் கூறி சஞ்சீவி மலையிலுள்ள சஞ்சிவி மூலிகையை எடுத்து வரும்படி சொல்ல, அனுமன் உடனே அங்குச் சென்று அம்மலையையே தூக்கிக் கொண்டு வந்து இலக்குவன் முதலானோரை மூர்ச்சைத் தெளிவித்த பின்பு, திரும்பவும் அம்மலையை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வருவதற்காக, வடதிசை நோக்கி பறந்து செல்கையில், சதுரகிரியில் தவம் செய்து கொண்டிருந்த சித்த முனிவர்கள் அந்த சஞ்சீவி கிரியில் தங்களுக்கு வேண்டிய அனேக மூலிகைகள் இருப்பதை தங்களது ஞான திருஷ்டியினால் தெரிந்து கொண்டு அம்மலையின் ஒரு பகுதி, இந்நான்கு கிரிகளுக்கும் [சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி] மத்தியில் விழவேண்டும் என்று நினைத்த உடனே அவர்களது பிரம்ம ஞான தவ வலிமையால் பெரிய காற்றை உண்டாக்கியதால் அச்சஞ்சீவி மலையின் ஒரு பகுதியானது இச்சதுரகிரிக்கு மத்தியில் விழுந்தது.

இம்மலையின் மூலிகைகள் தவத்தியானம் புரிந்து வருகின்ற முனிவர்களும், சித்தர்களும் பெறுவதற்கும், உலக வசியம், மோகனம், தம்பணம், பேதனம், மரணம், உச்சாடனம், வித்துவேடணம் போன்ற அஷ்ட காரியங்களுக்கு அனேக மந்திர சக்திகளுக்கு உதவுகிறது. தவிர இம்மலையின் காற்றானது உடலில் பட்டவுடன் சகல வியாதிகளும் எளிதில் குணமாகின்றன. சதுரகிரியில் செம்பை தங்கமாக்கும் மூலிகை இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு. பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களையும் சேர்வையால் செம்பை தங்கமாக உருவாக முடியும். இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும், பொருளையும் இழந்தவர்கள் பலர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை. பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும் இது சாத்தியமாகும். யாருக்கு சாத்தியமாகும் என்ற ஒரு விதியும்/பிராப்தமும் உண்டு. பல காலம் கழித்து எனக்கு எனது குரு செம்பை தங்கமாக மாற்றும் வித்தையை, மூலிகையின் கூட்டை நவபாஷாணத்தின் கலவையை அறிவிக்கிறேன், கற்பிக்கிறேன் என்றார். ஆனால், நான் மரியாதையுடன் வேண்டாம் என்று மறுத்திவிட்டேன்.

தங்கத்தினை எண்ணி தரம் தாழாதே,
தங்க இடம் பார் என்பதே

என்பதே எனது வேண்டுகோள்.

சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக்கிணறு உண்டு. உலோகத்தை தங்கமாக மாற்றும் தைல மூலிகை கிணறு. சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில் இறைபக்தியும், திருப்பணி கைங்கர்யகளில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியை தொடந்தான். ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள் பொருள் பற்றாகுறையால் பணியை தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவிபுரியவில்லை. சதுரகிரியில் தவம் புரிந்துக்கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான். நடந்தவற்றை கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி நின்றான். ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான்.

வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை, உதிர வேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி முதலியவற்றாலும், முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார். அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களை தங்கமாக உண்டாக்கினார். 'வணிகரே! ஈசன் கோயில் கட்ட உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து கோயிலை கட்டி முடி போ'' என்றார். காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற வணிகன் வாமதேவன் தன் விருப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான். அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதச் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றை கொண்டு மூடிவிட்டார். துஷ்டர்கள், பேராசைக்காரர், வீணர்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி, தைலக்கிணறு இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி இடத்தில் நான்கு திசைகளிலும் காவல் தெய்வத்தை நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

சதுரகிரியில் தீர்த்தங்கள்

'சந்திர தீர்த்தம்'

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குருத்துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீக தன்மை வாய்ந்த நதியாகும். வரட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாவரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தன மகாலிங்கம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சிவபெருமானை விட்டு பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தம் சதுரகிரி மலையில் உள்ளன.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆலயங்கள்

கருப்பணசுவாமி கோயில், ஸ்ரீ ராஜயோக் தங்க காளியம்மன் ஆலயம், கணபதி சாயை, இரட்டைலிங்கம் ஆலயம், ஓப்பிலாசாயை, பலாவடி கருப்பசாமி, சுந்தரர் கோயில், சந்தன மகாலிங்கம் கோயில், சந்தன மகாலிங்கம், சுந்தரலிங்கர் சன்னதி, ஆனந்தவல்லியம்மை கோயில், பைரவ மூர்த்தி, காளியம்மை, பேச்சியமை, கன்னிமார் கோயில், வெள்ளைப்பிள்ளையார் கோயில்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னமே சதுரகிரி செல்லும் எண்ணமும், திட்டமும் இருந்தது. இராஜபாளையத்திலிருக்கும் நண்பர் திரு.தணுஷ்கோடி அவர்களுக்கு போன் போட்டு சதுரகிரி பயணம் குறித்த செய்தி கூறினேன். அவரும் வாருங்கள் நானும் வருகிறேன், சேர்ந்து செல்வோம் என்றார். குறிப்பிட்டபடி, குறித்த நாளில் திரு.தணுஷ்கோடியை இராஜபாளையத்தில் சந்தித்தேன். மறுநாள் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்து விட்டதாகக் கூறி, இன்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து திரு.மணியம், திரு.திருமதி.வி.பி.ஆர்.மாணிக்கம், ஈரோட்டிலிருந்து திரு.திருநாவுக்கரசுடன், திரு,தணுஷ்கோடி, திரு.முருகேஷசன் சிவா மற்றும் உள்ளூர் நண்பர்கள் என பத்து பேர் சதுரகிரி யாத்திரையைத் தொடங்கினோம். நண்பர் திரு.தணுஷ்கோடி மதிய உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு வந்தார். உடன் இரவு உணவுக்கு அரிசியையும் கொண்டு வந்திருந்தார். மேலும் பூஜைக்குரிய பொருட்களும், தேங்காய், இளநீரும், பழங்களை ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் வாங்கிக்கொண்டோம்.

இராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூலிருந்து கிருஷ்ணன் கோயில், வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை வந்து சேர்ந்தோம். தாணிப்பாறையில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த இரண்டு சுமைகள் தூக்கும் மலையினர் எங்களின் சுமைகளைத் தூக்கிகொண்டு புறப்பட தாணிப் பாறை மலையடிவாரத்து நுழைவுப் பாதை முன்பு நின்று, சித்தர்களையும் ஸ்ரீ மகாலிங்க சுவாமியை மனதில் தினித்துக் கொண்டு சதுர மலை மீது ஏறத் தொடங்கும் போது காலை மணி 10.45. தாணிப்பாறை அடிவாரத்தில் கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், இராஜயோக காளியம்மன், விநாயகர், நாகர்கள் முதலான தெய்வங்கள் அருள் பாலிக்கிறார்கள். இவர்களை வழிபட்டபின் யாத்திரை தொடங்க வேண்டும். மலைப்பகுதி வனங்களில் மரங்கள் நிறைத்திருப்பதால், மலை நடைபாதை நிழலில் பயணத்தை தொடர்ந்தோம். சதுரகிரி மலையில் பல நோய்களை தீர்க்கும் தன்மை கொண்ட மூலிகை இருக்கிறது. அவைகள் எவை என்று அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இதய நோய், சக்கரை நோய், மூட்டு வலி போன்ற வியாதிகளை குணமாக்கும் மூலிகை உண்டு. வழி நெடுகிலும் ஒரே ஏற்ற இறக்கமாக இருந்தது. மலை உச்சிக்குச் செல்ல பிரதான பாதைளோ படிக்கட்டுகளோ கிடையாது. குண்டுப் பாறைகள் மீது ஏறித்தான் போக வேண்டும். சில இடங்களில் சமதளமான இடம் வரும். பிறகு மீண்டும் உயரமான பாறை. செல்லும் பாதை மாறி விடாமல் இருக்க, அம்புக்குறியிட்டு அடையாளம் காட்டப்பட்டு இருந்தது. பயணத்தின் முதல் ஆலயமாக இருந்தது கருப்பண சாமி கோயில். சிறிய கோயில். நாங்கள் கருப்பண சந்நிதி கடக்கும் சமயம் அங்கு ஒரு குடும்பம் கருப்பண சாமிக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஆடுகள் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டு இருந்தது. எந்த நிமிடமும் வெட்டுவதற்கு தயாராக இருந்தது. அந்த காட்சியை நாங்கள் காண விரும்பவில்லை. விரைவாக அவ்விடத்தினை விட்டு நகர்ந்துவிட்டோம்.

கருப்பண சாமி சன்னதிக்கு அடுத்து ஒரு மரத்தடியில் வன பேச்சியம்மன் அம்மன். அதனை தொடர்ந்து வரும் ஆலயம் ஆசீர்வாத விநாயகர். இங்கு நாங்கள் கொண்டு சென்ற இளநீர் அபிஷேக பொருட்களை கொடுத்து எங்கள் பயணம் விக்கனமின்றி நல்லபடி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். பொதுவாக விநாயகர் தும்பிக்கை இடம் அல்லது வலமாக இருக்கும். ஆனால் இங்கு விநாயகர் தும்பிக்கை சதுரகிரி மலையை நோக்கி இருந்தது.

ஆசீர்வாத விநாயகர் ஆலயத்தை அடுத்து இருப்பது ஸ்ரீ இராஜயோக தங்க காளியம்மன் ஆலயம். அன்னையின் ஆசி பெற்று எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். தபசுக் குகையை நெருங்கியதும் சித்தர் பெருமான்களை மனதில் வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நடைபயணத்தின் போது இயற்கை அழகு மனதுக்கு இதமாக இருந்தது. சலசலத்து பாறையின் ஊடே ஓடும் ஓடை, கானகத்தின் குளிர்ச்சி நமக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. சுமார் ஒருமணி நேர நடைப்பயணத்திற்குப் பின் நம்மை சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான். அம்மலைகளுக்கு நடுவில் எங்கள் பயணம் தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல், இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் எனக் காணப்பட்டாலும் அங்கிருந்து அனைத்து மலைகளையும் கடந்துதான் சென்றுள்ளோம் என்ற விஷயம், நாங்கள் கீழே இறங்கி வந்தபோது உணர்ந்தோம்.போகப் போக பாதையும், பயணமும் நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.

'புல்வரம்பாய பல்முறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
தெய்வம் என்பதோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறுவேறு தம் மாயை தொடங்கின
தெய்வத்தை தேடி அடைவதே'

என்ற எண்ணம் வந்து, பரம்பொருளைத் தேடும்போது, ஆறு கோடி மாயாசக்தி எனக்கெதிராக படை திரட்டுகின்றனவே என்கிறார் மாணிக்கவாசகர். அந்த நிலைதான் எனது நிலை. செங்குத்தான பாறையின் மீது மூச்சை தம்கட்டி ஏறும்போது உடலும், காலும் சோர்ந்து விடுகிறது. இன்னும் எவ்வளவு என்று ஆதாங்கத்தில் கேட்டால், உடன் வந்த அன்பர்கள் சலிக்காமல் 'இதோ வந்து விட்டது, அந்த வளைவைத் தாண்டிவிட்டால்... அவ்வளவுதான் இடம் வந்துவிடும்'' என்பார்கள். அது நம்மை சோர்வடையாமல் இருக்க உற்சாகமூட்டுவது. இப்படி பல முறை சொல்லி வந்த நண்பர்களுக்கு நானும் ஒரு கதை கூறினேன்.

பட்டணத்து ஆசாமி ஒருவர் கிராமத்திற்கு செல்ல பேருந்தை விட்டு இறங்கி அங்கிருந்து கிராமத்து ஆளிடம் கிராமத்துப் பெயரைக்கூறி எவ்வளவு தூரமப்பா என்று கேட்டிருக்கிறார். கிராமத்தான் பக்கந்தானுங்க, கூப்பிடும் தூரம்தான். ஒரு கி.மீ. துரம்தாங்க இருக்கும். எனக்கும் அந்த கிராமம்தாங்க என்று கூறியவாறு பேசிக்கொண்டே நடந்துள்ளார்கள். நீண்ட தூரம் நடந்தும் கிராமம் வரவில்லை. பட்டணத்து ஆசாமி, என்னப்பா பக்கம் கூப்பிடும் தூரமின்னு சொன்ன இன்னும் கிராமமே தெரியவில்லை என்று கேட்டான். அதற்கு இந்த கிராமத்தான் ''அய்யா, நான் கூப்பிட்டாலே இரண்டு கி.மீட்டர் வரை கேட்கும் என்றானாம். நண்பர்கள் சிரித்துக்கொண்டு இதோ வந்து விட்டோம் என்றார்கள். உண்மையில் இடைவேளை, சாப்பாடு வந்துவிட்டது. ஆக கடைசியாக நான்தான் சென்று கொண்டு இருந்தேன். நான் தனியாக செல்வதைக் கண்ட முருகேஷன் சிவாவும் மற்றும் இரு நண்பர்களும் எனக்கு துணையாக வந்தார்கள். நடைப்பயணத்தின் அலுப்பு தெரியாமல் இருக்க முருகேஷன் சிவா மலையில் தனக்கு ஏற்பட்ட அனுவங்கள், சித்தர்களின் சந்திப்பு போன்ற
சேதிகளை, விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டு வந்தார். சுமார் மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் கோரக்கர் குகையை அடைந்தோம். கோரகுண்டா விஸ்தாரமான ஒரு பகுதி. போகரின் சிஷ்யரான கோரக்கர் இங்குதான் குகை அமைத்துத் தவம் புரிந்ததாக கூறினார்கள். இங்கே சற்று ஆற அமர அமர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அர்ஜுனா நதி நீர் சுழித்துச் செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாறை அருகிலிருந்த அருமையான நீரோட்டத்தில் அலுப்பு தீரா நீராடி விட்டு மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம்.

இந்த இடைவேளையில் இந்த கோரக்கர் குகைப்பற்றி நண்பர் சிவா விபரம் கூறினார். பழனியில் பிரதிஷ்டை செய்வதற்காக போகரின் உததரவுப்படி தண்டாயுதபாணி சுவாமியின் விக்கிரகத்தை இங்குதான் தயாரித்தாராம். அப்படி தயாரிக்கும்போது தண்ணீர் எப்போது இருக்க வேண்டும் என்பதற்காக ஓரிடத்தில் தன் கையால் அணை போல் கட்டிச் சேமித்து வைத்துள்ளார். அதுவே ‘கோரக்கர் உற்று''ஆயிற்று.

- பயணம் தொடரும்

Popular posts from this blog

Mahapalipuram temple during on Pallava dynasty:

Shakti, Goddess of Energy